அமெரிக்க சுதந்திரப் போரின் 250-ஆவது ஆண்டு விழாவையொட்டி சவுத் டகோட்டாவில் உள்ள மவுண்ட் ரஷ்மோர் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கம்யூனிச சித்தாந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு கம்யூனிசம் ஒரு கொடிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஆபத்தானது முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், பேர்ல் ஹார்பர் தாக்குதல் அல்லது செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களை விடவும் மிக மோசமானது என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் தனித்துவமான வாழ்க்கை முறை மற்றும் நாட்டின் வெற்றிக்கு முற்றிலும் முரணான கருத்துகளோடு வரும் சில புதிய குடியேறிகளால் இந்த கம்யூனிச அச்சுறுத்தல் நாட்டில் மீண்டும் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய டிரம்ப், அமெரிக்கா ஒருபோதும் கம்யூனிச நாடாக மாறாது என்று திட்டவட்டமாக முழங்கியுள்ளார். அமெரிக்க ராணுவத்தின் பலம் மற்றும் 250 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்பை பெருமிதத்துடன் சுட்டிக்காட்டிய டிரம்ப், உலகின் மிக வலிமையான ராணுவத்தைக் கட்டமைத்து இரு உலகப்போர்களை வென்ற நாடு அமெரிக்கா என்றும், பனிப்போருக்குப் பிறகு அமெரிக்காவின் எதிரிகள் வரலாற்றின் ஆழத்தில் மறைந்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
அண்மைய சர்வதேச மோதல்கள் குறித்துப் பேசிய அவர், ஒரே நாளில் வெனிசுலாவைத் தோற்கடித்ததுடன், ஈரானுக்குப் பலத்த அடியைக் கொடுத்துள்ளதாகவும், இதனால் ஈரான் தற்போது தங்களுடன் ஒப்பந்தம் செய்ய ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவையடுத்து அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய டிரம்ப், பசிப்பிணியைப் போக்குவதிலும், நோய்களைக் குணப்படுத்துவதிலும், மனிதகுல மேம்பாட்டிற்குப் பங்களிப்பதிலும் அமெரிக்காவைப் போல வேறு எந்த நாடும் தாராளமாகச் செயல்பட்டதில்லை என்றும், உலகின் மிக நீடித்த மற்றும் நீதியான அரசியலமைப்பைக் கொண்ட சுதந்திர தேசம் அமெரிக்கா என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
