மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகார் அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது
இந்தச் சதித் திட்டத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 நபர்களில், நீடா கான் என்ற பெண்ணும் ஒருவராவார். அவர் சக பெண் ஊழியருக்குப் புர்கா மற்றும் இஸ்லாமிய மதப் புத்தகங்களை வழங்கிக் கட்டாயத் தொழுகை செய்ய வற்புறுத்தியதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 42 நாட்கள் தலைமறைவாக இருந்த நீடா கானை, கடந்த மே மாதம் சத்ரபதி சம்பாஜிநகரில் வைத்து போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும் நீடா கான், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு நாசிக் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ஜி. ஜோஷி, பிறக்கப்போகும் குழந்தையின் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு 75,000 ரூபாய் பிணைத் தொகையுடன் கூடிய ஜாமீனை அதிரடியாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ளார்.
மேலும் தனது தீர்ப்பில், “சிறைச்சாலையில் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல ஒரு குழந்தை பிறப்பதையோ, அதன் காரணமாக அந்தப் பிஞ்சு குழந்தை பிற்காலத்தில் சமூகத்தில் அவமதிப்பைச் சந்திப்பதையோ ஒருபோதும் ஏற்க முடியாது” என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
அதேநேரம், ஜாமீனில் வெளிவரும் நீடா கான் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது, பாதிக்கப்பட்ட பெண் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது, நாட்டின் எல்லையைத் தாண்டக் கூடாது போன்ற பல கடுமையான நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
