ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள பாரஸ்ட் கடற்கரையில் கடந்த சில தினங்களாக வெள்ளி நிறத்திலான விசித்திர உலோகப் பந்துகள் அடுத்தடுத்து கரை ஒதுங்கி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தின.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அந்தப் பகுதியைச் சுற்றி 50 மீட்டர் தூரத்திற்குத் தீயணைப்புத்துறையினர் உடனடியாகத் தடை விதித்ததோடு, அப்பகுதி மக்கள் யாரும் அந்தப் பொருட்களைத் தொட வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.
இதுகுறித்த மர்மம் நீடித்த நிலையில், ஆஸ்திரேலிய விண்வெளி முகமை நடத்திய விரிவான ஆய்வில் இவை விண்வெளிச் சிதைவுகள் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த ஏதோவொரு வெளிநாட்டு ராக்கெட்டின் அழுத்தக் கலன்களாக இவை இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தற்போதைக்கு இந்தப் பொருட்களால் உடனடி ஆபத்தில்லை என்றாலும், இது எந்த நாட்டின் ராக்கெட்டிலிருந்து பிரிந்தது என்பதைக் கண்டறிய சர்வதேச விண்வெளி நிறுவனங்களுடன் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், வரும் நாட்களில் இதே போன்ற சிதைவுகள் மீண்டும் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதால், முழுமையாக ஆய்வு செய்யும் வரை பொதுமக்கள் அவற்றை ஆபத்தானதாகவே கருதி தள்ளியிருக்க வேண்டும் என்றும் விண்வெளி முகமை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
