மத்திய பிரதேச மாநிலம் விடிஷா பகுதியில் உள்ள புதிய விவசாய விளைபொருள் சந்தை அருகே வசித்து வரும் 12 வயது சிறுவன் வீரன் விஸ்வகர்மா, நேற்று காலை இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகப் பக்கத்தில் உள்ள சுரங்கப் பகுதிக்குச் சென்றுள்ளான்.
அப்போது அங்கு சுற்றித் திரிந்த நான்கு தெருநாய்கள் அச்சிறுவனை திடீரெனச் சூழ்ந்து கொண்டு, பயந்து ஓடிய அவனை விரட்டி விரட்டிக் கொடூரமாகக் கடித்தன.
நாய்களின் இந்த வெறித்தனமான தாக்குதலில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து நாய்களை விரட்டிச் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்துச் சிறுவனின் தந்தை பலராம் விஸ்வகர்மா பேசுகையில், தங்களது வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தான் குழந்தைகள் வெளியே செல்லும் அவலம் நீடிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
தங்களது பகுதிக்குக் கழிப்பறை வசதி செய்து தருமாறு ராபராய் கிராம பஞ்சாயத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் இந்த அலட்சியமே தனது மகன் நாய் கடிக்கு ஆளாகக் காரணம் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், இப்பகுதியில் உள்ள தெருநாய்கள் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளையும் துரத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகக் கூறும் உள்ளூர் மக்கள், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அந்த நாய்களை உடனடியாகப் பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
