கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்கும் நிகழ்வு, கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் விஜய், அன்று கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தபோது கரூர் காவல்துறை தங்களை எச்சரித்திருக்கலாம் அல்லது தங்களைக் கேட்காமலேயே கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம் என்றும், ஆனால் நெடுஞ்சாலையிலிருந்து தங்களை உள்ளே அழைத்து வந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டார்கள் என்றும் திமுக அரசையும் காவல்துறையையும் கடுமையாகச் சாடிப் பேசினார்.

முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி விமர்சனம் குறித்து திமுக எம்பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் அதற்கு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கடமையை உணர்ந்து பேச வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கனிமொழி, இந்த விவகாரம் தற்பொழுது விசாரணையில் இருப்பதால் தான் பொறுப்புடன் இதுகுறித்து விரிவாகப் பேச விரும்பவில்லை என்று கூறினார்.

மேலும், விபத்து நடந்த அந்த இக்கட்டான நேரத்தில் ஒடி ஒளியாமல் மக்களோடு நின்று உதவியவர்கள் யார், மக்களை அப்படியே தவிக்கவிட்டுவிட்டு அங்கிருந்து சென்றவர்கள் யார் என்பது கரூர் மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும் என்று முதல்வர் விஜய்யை நோக்கி மறைமுகமாக அம்பு எய்துள்ளார்.