இமாச்சல பிரதேசத்தின் காங்ரா பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் கடையில், ஜூகல் கிஷோர் என்பவர் கொரியன் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த நூடுல்ஸைச் சாப்பிட்ட அவருடைய மகள், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடுமையான வாந்தி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்து பாக்கெட்டைச் சரிபார்த்தபோது, அது மூன்று மாதங்களுக்கு முன்பே  காலாவதியானது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட தந்தை, நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் உடனே புகார் அளித்தார்.

வழக்கு விசாரணையின் போது, “பொருட்களின் காலாவதி தேதியைச் சரிபார்த்து வாங்குவது வாடிக்கையாளரின் பொறுப்பு” என்றும், “குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கான மருத்துவ சான்றிதழ் இல்லை” என்றும் ரிலையன்ஸ் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால், இந்த வாதங்களை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற அமர்வு முற்றிலும் நிராகரித்தது.

“ஒரு தந்தை தன் குழந்தையின் உடல்நிலை குறித்துப் பொய் சொல்ல மாட்டார் என்றும், காலாவதியான பழைய பொருட்களைக் கடைகளில் இருந்து அகற்றுவது விற்பனையாளரின் முதன்மைக் கடமை” என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினர்.

இறுதித் தீர்ப்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.15,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.5,000 என மொத்தம் ரூ.20,000 இழப்பீட்டை ஒரு மாதத்திற்குள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.