தமிழக காவல் துறையில் திடீர் நிர்வாக மாற்றமாக, சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. காவல் துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் வி. வருண்குமார் ஐபிஎஸ், ஈரோடு சத்தியமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிறப்பு அதிரடிப்படையின் காவல் துறை துணைத் தலைவராக அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையின்படி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு சிறப்பு அதிரடிப்படையின் ஐஜி பதவி காலியாக இருந்த நிலையில், அந்தப் பதவியின் அந்தஸ்தை தற்காலிகமாக டிஐஜி பதவியாகக் குறைத்து, தற்போது அந்த இடத்திற்கு வருண்குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே உத்தரவின்படி, மேலும் இரண்டு முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இதுவரை கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த காவல் துறை துணைத் தலைவர் வி. விக்ரமன் ஐபிஎஸ், தற்போது வருண்குமார் வகித்து வந்த சென்னை சிபிசிஐடி-யின் புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
