தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி இந்த லஞ்சப் பேரம் நடத்தப்பட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கடந்த ஜூன் 29-ஆம் தேதி எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சதித்திட்டத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமண பெருமாள் என்பவருக்கு முக்கிய தொடர்பு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிங்கப்பூரில் தங்கியிருக்கும் லட்சுமண பெருமாள், இந்த வழக்கின் முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களான ஹோட்டல் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களை அங்கிருந்தபடியே அழிக்க முயன்றதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள அவரை இந்தியாவிற்கு கொண்டு வந்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர தமிழக காவல்துறை தற்போது ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் யூடியூபர் திருநாவுக்கரசு என்பவர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
