பீகார் மாநிலத்தில் குடிப்பழக்கத்தால் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. லக்கிசராய் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த நாகேஸ்வர் பிந்த் என்ற நபர், புதன்கிழமை காலை தனது மனைவி சகோதரி தேவியுடன் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்று வந்துள்ளார்.
அதன் பின்னர் வீட்டில் அசைவ உணவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு மனைவி தூங்கிய நேரத்தில், கணவன் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், கோடரி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்தும், முகத்தில் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்கான தடையங்களை மறைப்பதற்காகத் தனது மண் வீட்டு அறைக்குள்ளேயே ஒரு குழி தோண்டி, மனைவியின் உடலைப் புதைத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் வெளியில் நடமாடியுள்ளார்.
மாலையில் வீட்டைப் பூட்டிவிட்டு அவர் தப்பியோட முயன்றபோது, வீட்டின் உள்ளே கட்டப்பட்டிருந்த ஆடுகள் பசியாலும் தாகத்தாலும் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்துள்ளன.
ஆடுகளுக்குத் தீவனம் வைக்காமல், யாரிடமும் சொல்லாமல் மனைவி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளதாகக் கணவர் கூறிய பதில், அக்கம் பக்கத்தினருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனே கிராம மக்கள் அந்த நபரைப் பிடித்து வைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூர்யகர்ஹா போலீசார், அந்த ஆசாமியிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தவற்றை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் வீட்டின் தரையைத் தோண்டி, புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்களுக்குக் குழந்தைகள் இல்லாததால் மனைவியுடன் மகிழ்ச்சியாக இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் கொலையாளி தெரிவித்துள்ள போதிலும், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் இந்த வழக்கில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
