இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2026 ஐபிஎல் தொடரில் தனது மின்னல் வேகப் பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள 23 வயதான இவர், எதிர்காலத்தில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பந்துவீச விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்காகத் தனது உடற்தகுதியையும், பந்துவீச்சு நுணுக்கங்களையும் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகக் கூறும் அவர், ஏற்கனவே 154 கி.மீ வேகத்தில் பந்துவீசி மிரள வைத்துள்ளார். சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான ‘இந்தியா ஏ’ அணியிலும் இவருக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஷோயப் அக்தர் 161.3 கி.மீ வேகத்தில் பந்துவீசி வைத்துள்ள உலக சாதனையை முறியடிப்பது எளிதான காரியம் அல்ல என்றாலும், அசோக் சர்மா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2025 சையத் முஷ்டாக் அலி தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவர், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகச் சிறப்பாகப் பந்துவீசி தேர்வுக்குழுவினரின் பாராட்டைப் பெற்றார்.

தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அசோக் சர்மா, அந்தப் போட்டிகளில் தனது வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்து, தனது சர்வதேச அறிமுகத்தைப் பதிவு செய்வார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.