மேற்கு வங்க மாநிலத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோடேபூர் பகுதியில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இங்குள்ள சோடேபூர் அருகே உள்ள சாலையில், கணவன் ஒருவன் பொதுமக்களின் கண் முன்னாடியே தனது மனைவியை விபரீத ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் கொலைச் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உரைய வைத்துள்ளது.
காவல்துறை தரப்பிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, உயிரிழந்த பெண்ணின் பெயர் கீதா தாஸ் என்றும், கொலையாளி அவரது கணவர் சுபாஷ் தாஸ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கீதா தாஸ் தனது வீட்டிலிருந்து சோடேபூர் இரயில் நிலையத்தை நோக்கிச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, காஞ்ச்கல் பள்ளிச் சந்திப்பில் வைத்து சுபாஷ் தாஸ் அவரை திடீரென வழிமறித்துக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், உயிருக்குப் போராடும் கீதா தாஸ் தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கடுமையாகப் போராடுவதும், அங்கிருந்த பாதசாரிகள் சிலர் சண்டையை விலக்க முயல்வதும் பதிவாகியுள்ளது.
ஆனால், கொலையாளி சுபாஷ் கத்தியைக் காட்டி அங்கிருந்தவர்களையும் வெட்டப் போவதாக மிரட்டியதால், பயந்துபோன பொதுமக்கள் திகைத்து நின்று வேடிக்கை பார்க்கும் அவலம் நேரிட்டுள்ளது.
இந்தக் கொடூரத்தின் உச்சக்கட்டமாக, தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த பின்னர், அதே கூர்மையான ஆயுதத்தால் சுபாஷ் தாஸ் தன்னையும் பலமுறை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் அந்த இடமே ரத்த வெள்ளமாகக் காட்சியளித்ததுடன், அப்பகுதி முழுவதும் பெரும் பயமும் பீதியும் நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கர்தா பிரிவு காவல்துறையினர், படுகாயமடைந்த சுபாஷ் தாஸை மீட்டு உள்ளூர் சாகர் தத்தா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் துயரமான கொலைச் சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
