மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான போர்க்களமே நீடித்து வருகிறது. கச்சத்தீவு, காவிரி உள்ளிட்ட விவகாரங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸை விமர்சித்திருந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தற்போது மிகக் காரசாரமான புதிய பதிலடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“பாஜக தமிழகத்திற்குச் செய்த துரோகங்களை மூடிமறைக்க இப்படி ஒரு தப்பியோடும் அறிக்கையா நயினார் நாகேந்திரன்? என்ன சார் இது நியாயமா?” என்று அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் பழிவாங்கலுக்காக கடந்த 12 ஆண்டுகளாக பாஜக உருட்டிய ‘நேஷனல் ஹெரால்டு’ புகாரை டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்து தூக்கி எறிந்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) ஆன்மாவைக் கொன்றுவிட்டு, அதற்கு ‘VBGRAM’ எனப் பெயர் மாற்றி நாடகமாடுவதாகச் சாடியுள்ளார். மத்திய-மாநில நிதிப் பகிர்வை மாற்றி தமிழகத்தின் மீது கூடுதலாக 5,000 கோடி ரூபாய் நிதிச் சுமையைச் சுமத்துவது, மகாத்மா காந்தியை இரண்டாவது முறை கொல்வதற்குச் சமம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

2015 முதல் 2026 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க முற்பட்ட பாஜகவின் செயல் ‘மறைமுக எமர்ஜென்சி’ என்றும், ஆளுநர் மாளிகைகளை அரசியல் அலுவலகங்களாக மாற்றிவிட்டு கூட்டாட்சி பற்றிப் பேச பாஜகவுக்குத் தகுதி இல்லை என்றும் சாடியுள்ளார்.

தமிழகம் கொடுக்கும் வரிப் பணத்தில் வெறும் 29 பைசா மட்டுமே திரும்ப வருகிறது என்பது அதிகாரப்பூர்வ நிதித்துறை தரவு என்றும், அதை உங்களால் மறுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பக்தி என்ற போர்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் தினமும் 6 முதல் 8 லட்சம் ரூபாய் காணிக்கைப் பணம் திருடப்பட்டதாக எஸ்ஐடி (SIT) விசாரணையில் அம்பலமாகியுள்ளதையும், சிஏஜி (CAG) அறிக்கை அம்பலப்படுத்திய துவாரகா எக்ஸ்பிரஸ்வே மற்றும் ஆயுஷ்மான் பாரத் முறைகேடுகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

‘வாட்ஸ்அப் பல்கலைக்கழக’ கதைகளைப் பேசி தப்பிக்கப் பார்க்காமல், தமிழகத்திற்கு இழைக்கப்படும் தொடர் நிதி அநீதிக்கும், ராமர் கோவில் கொள்ளைக்கும் முதலில் பதில் சொல்லுங்கள் என்று நயினார் நாகேந்திரனை மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாகத் தோலுரித்துள்ளார்.