சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான திருமண வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் சமீபத்தில் எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ ஒட்டுமொத்த இணைய உலகையே அதிர வைத்துள்ளது. பொதுவாக திரைப்படங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு கிளைமாக்ஸ் காட்சி, நிஜத் திருமண மேடையில் அரங்கேறியுள்ளது. திருமண சடங்குகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த வேளையில், திடீரென மணமேடைக்கு வந்த மணப்பெண்ணின் காதலன், அங்கிருந்த மணமகன் மற்றும் உறவினர்கள் என அனைவரது முன்னிலையிலும் யாரும் எதிர்பாராத விதமாக மணப்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்தார். ஒரு சில நொடிகளில் திருமண மகிழ்ச்சி, அங்கு பெரும் கலவரமாக மாறியது.

 

காதலனின் இந்த அதிரடி செயலால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். மணமகனுக்கு முன்னாலேயே இப்படி ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்த அந்த காதலனை அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் இல்லை என்றாலும், ஒரு பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் ஜூலை 7, 2026 அன்று இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “மாலை மாற்றும்போது வந்து குங்குமம் வைக்குமாறு காதலி கூறியிருந்தாள், ஆனால் அதன் பிறகு என்ன நடக்கும் என்று அவள் சொல்லவில்லை. பாவம், தம்பிக்கு ஒரு பல்பு உடைந்துவிட்டது” என நகைச்சுவையாகக் பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது 2.83 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவைப் பார்த்து, சிலர் காதலனின் தைரியத்தைப் பாராட்டினாலும், பலர் இது ஆபத்தான விளையாட்டு என விமர்சித்து வருகின்றனர்.