சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த முக்கிய ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை அமைச்சர்களான சம்பத்குமார், ஷாஜகான் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் நேரில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் வழங்கப்பட உள்ள இலவச மிதிவண்டிகளின் நிறம் மற்றும் அதன் தரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், அரசு விடுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதனுடன், சிறுபான்மையினர் நலன் சார்ந்த ஹஜ் புனித பயணம், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் புனரமைப்புப் பணிகள், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் விவாதித்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
