ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டு பொதுப் பிரிவின் கீழ் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் உட்பட 3 ஆசிரியர்கள் இந்த முக்கிய மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

​இந்த வழக்கின் விசாரணையின் போது, பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் முக்கியக் கொள்கை முடிவு எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, “அரசின் கொள்கை முடிவை வரும் ஜூலை 24-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்; அதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது” என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவு, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியுள்ள லட்சக்கணக்கான தேர்வர்கள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.