இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் தனது வாழ்த்துகளுடன் தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இப்புகைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் விஜய் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பிலும், தோனி ஒரு விளம்பரப் படப்பிடிப்பிலும் இருந்தபோது எடுக்கப்பட்டதாகும்.
மேலும் இவர்களின் இந்த ரீ-யூனியன் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், “கேப்டன் கூல் மற்றும் கூலஸ்ட் சிஎம்” என்று உற்சாகத்துடன் பதிவிட்டு தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, அவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த பிறந்தநாள் வாழ்த்து அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும், “இருவருமே தங்களைப் விமர்சிப்பவர்களுக்கு வார்த்தைகளால் பதில் சொல்லாமல் தங்களின் செயல்களால் மட்டுமே பதிலடி கொடுப்பவர்கள்” என இருவருக்குமான ஒற்றுமைகளைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
