இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

2026 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வந்த சஞ்சு சாம்சன், கடந்த மூன்று போட்டிகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். மேலும், ஜிம்பாப்வே தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதால், சஞ்சுவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

​இந்த படுதோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சஞ்சு சாம்சனின் எதிர்காலம் குறித்து முக்கிய விளக்கமளித்துள்ளார். “சஞ்சு சாம்சனுக்குத் தேவையான தெளிவை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். பயிற்சியாளருக்கும் ஆட்டக்காரருக்கும் இடையே நடந்த அந்த உரையாடல் ரகசியமாகவே இருக்கும். உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் செய்த பங்களிப்பு அபாரமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், சில நேரங்களில் ஒரு வீரரின் தற்போதைய ஃபார்மையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது,” என்று கம்பீர் கூறினார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் முடிவுகளே முக்கியம் என்றும், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை ஒவ்வொரு வீரரும் தங்களின் திறமையால் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.