மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் செயற்கை முறையில் போலி பால் தயாரித்து விற்பனை செய்து வந்த ஒரு மாபெரும் சட்டவிரோத கும்பலை, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் (FDA) புனே ஊரகக் காவற்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவும் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் கண்டுபிடித்துள்ளனர்.
போலி பால் தயாரிப்பதற்காகப் பால் பவுடர், டிடர்ஜென்ட், ஷாம்பூ, பாமாயில் மற்றும் கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததும், இதற்கான முக்கியப் பொருட்கள் புனே மாவட்டத்தின் மஞ்சர் பகுதியிலிருந்து விநியோகம் செய்யப்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த மோசடியின் பின்னணியில் மஞ்சர் பகுதியைச் சேர்ந்த சுஷாந்த் ஹிங்கே என்பவன் முக்கிய சூத்திரதாரியாகவும், சந்தீப் லோதா என்பவன் இதற்கு ஆலோசனைகள் வழங்கும் இடைத்தரகராகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் புனே, அகில்யாநகர், சோலாப்பூர், ஜால்னா மற்றும் தானே ஆகிய 5 மாவட்டங்களில் 30 உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 40 காவற்துறையினர் அடங்கிய தனிப்படையினர் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின் போது சுமார் 1.47 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, பொதுமக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 20,000 லிட்டர் போலி பால் சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டது.
இந்த மாநில அளவிலான போலி பால் விநியோகச் சங்கிலித் தொடர் வழக்கில் மொத்தம் 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுள் 13 பேரை காவற்துறையினர் கைது செய்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்;
மீதமுள்ள 13 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட 5 நிறுவனங்களின் உணவு வணிக உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 4 நிறுவனங்கள் முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
