ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு 833 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் அலட்சியமான விசாரணையைக் கண்டித்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஐந்து நபர்களை விடுதலை செய்துள்ளது.
இதுகுறித்து கடந்த 2021-ஆம் ஆண்டு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உரிய பஞ்சநாமா மற்றும் பறிமுதல் ஆவணங்களைத் தயாரிக்காமல், 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களின் அலுவலகத்திற்கு வாகனத்தை எடுத்துச் சென்று சோதனையிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை மற்றும் சான்றுகளைக் கையாண்ட விதம் ஆகியவை NDPS சட்டத்தின் கட்டாயப் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்றும், சோதனையின் நம்பகத்தன்மையை முழுமையாகக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறி நீதிமன்றம் தங்களின் கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.
இதனால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி DRI அமைப்பின் காவலில் இருந்தபோதே அங்கிருந்து தப்பியோடியுள்ளார். நாட்டின் மிக உயரிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் வளாகத்தில் இருந்தே முக்கியக் குற்றவாளி தப்பியது, ஏற்கவில்லை.
இந்நிலையில் அந்த அமைப்பின் கண்காணிப்பு குறைபாட்டையும், ஒழுக்கமின்மையையும் காட்டுவதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி ரவீந்திர குமார் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐந்து பேரின் 15 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவித்தது.
மேலும், இந்த வழக்கை விசாரித்த மற்றும் மேற்பார்வையிட்ட அதிகாரிகள் மீது விரிவான துறைசார் விசாரணை நடத்தி, பொறுப்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று புது தில்லியில் உள்ள DRI தலைமை இயக்குநருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
