தாய்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பெட்சாபுரி மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இரண்டு தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் அங்குள்ள ‘டோன் யாய் தோங்’ என்ற புதிய வரலாற்றுத் தளத்தில் மனித எலும்புக்கூடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட இந்த மோதிரங்களில், ஒரு மோதிரத்தில் பண்டைய இந்தியாவின் மிகப்பழமையான எழுத்து வடிவமான பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதனால் நெல் வயல் ஒன்றில் தற்செயலாகக் கிடைத்த பழங்கால வெண்கல முரசுகளின் துண்டுகளைத் தொடர்ந்து இந்த அகழ்வாய்வு தொடங்கப்பட்டது. அங்கு உயர்குடியினரின் உடல்களுடன் தங்கம், வெண்கல ஆபரணங்கள் மற்றும் மண்பாண்டங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பிராமி எழுத்து மோதிரமானது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையே இருந்த ஆழமான கடல்வழி வணிகத் தொடர்பை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது. இந்தத் தங்க மோதிரத்தில் உள்ள எழுத்துக்களை ஆரம்பக்கட்ட ஆய்வு செய்த வல்லுநர்கள், அதில் “புசரகினஸ” என்று எழுதப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு இதற்கு இந்திய வானியலில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் பூச நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு, “பூச நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்” என்று பொருளாகும். இந்த மோதிரத்தின் வடிவமைப்பு மற்றும் ஆபரணங்களின் மதிப்பை வைத்துப் பார்க்கும்போது, இதனைப் பயன்படுத்தியவர் பண்டைய இந்திய வர்த்தக சமூகமான ‘வைசிய’ வகுப்பைச் சேர்ந்த ஒரு செல்வந்தராகவோ அல்லது வணிகராகவோ இருந்திருக்கலாம் என்று தாய்லாந்து தொல்லியல் துறை நம்புகிறது.

இந்நிலையில் நவீன எல்லைகள் உருவாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா வழியாகப் பயணித்த இந்திய வணிகர்கள், தங்களின் வாசனைப் பொருட்கள் மற்றும் உலோகங்களுடன் சேர்த்து மொழி, எழுத்து வடிவம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளையும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளனர் என்பதற்கு இந்த மோதிரம் ஒரு முக்கிய காலப் பெட்டகமாக திகழ்கிறது.