டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள அருணா அசஃப் அலி அரசு மருத்துவமனையின் அறை ஒன்றில், 35 வயதான இளம் மருத்துவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு வந்த அவசரத் தகவலை அடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அங்கு மயக்கவியல் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த டாக்டர் சிமர்பிரீத் சிங் ஆனந்த் என்பவர் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாகப் பரிசோதித்த சக மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த், கடந்த ஜூலை 5-ஆம் தேதி இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையிலான இரவு நேரப் பணியில் இருந்துள்ளார்.
காலை 9 மணியளவில் அவரது பணி அறை கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். எந்தப் பதிலும் வராததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோதுதான் இந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து டெல்லி போலீசார், டாக்டர் ஆனந்த் எழுதிய மூன்று பக்க தற்கொலை கடிதத்தைக் (னகைப்பற்றியுள்ளனர். அவர் தனது ரகசிய டைரியில் இந்த உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவருடன் டாக்டர் ஆனந்திற்கு நீண்ட நாட்களாகக் காதல் இருந்துள்ளது. அவர்கள் இருவருமே மருத்துவர்களாக இருந்தபோதிலும், “நீங்கள் இருவரும் மருத்துவர்களாக இருந்தாலும், நம்முடைய ஜாதிகள் வேறு வேறாக இருப்பதால் இந்தத் திருமணத்தை நடத்த முடியாது” எனக் கூறி இருதரப்பு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் காரணமாகவே, டாக்டர் ஆனந்த் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் இத்தகைய துயரமான முடிவை எடுத்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
