மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த கேதன் அகர்வால் கொலைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தெலங்கானா மாநிலத்தில் அதே போன்ற ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில், சந்தியா என்ற பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். 35 வயதான பிரசாந்த் என்ற நபர் வளைகுடா நாடு ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பிரசாந்தின் திடீர் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது வயதான தாய், கடந்த ஜூலை 1-ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார்.

தனது மகன் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியதே தனக்குத் தெரியாது என்றும், ஜூன் 30 அன்று அவன் இறந்துவிட்டதாக வந்த தகவலால் சந்தேகம் ஏற்பட்டு மருமகள் சந்தியா மீது புகார் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

போலீஸ் விசாரணையில், சந்தியாவிற்கும் அனில் என்ற நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், அதற்கு இடையூறாக இருந்த கணவன் பிரசாந்தைக் கொல்ல அவர்கள் வெங்கட் சாய் என்ற மூன்றாவது நபருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியதும் அம்பலமானது.

அதன்படி, கடந்த ஜூன் 29 அன்று வெங்கட் சாய், பிரசாந்திற்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்து போதையாக்கியுள்ளார். பின்னர் அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, கீழே தள்ளிவிட்டுள்ளார். மாடியில் இருந்து விழுந்தும் பிரசாந்த் உயிர் பிழைத்ததால், சந்தேகம் வராமல் இருக்க சந்தியா அவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அங்கு மருத்துவர்கள் சிகிச்சையின் ஒரு பகுதியாகப் பிரசாந்தின் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்கான ‘கன்யூலா’  குழாயைப் பொருத்தியுள்ளனர். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

மாடியில் இருந்து தள்ளியும் கணவன் சாகாததால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அனில், பிரசாந்தைக் கொல்ல புதிய ஐடியா ஒன்றைச் சந்தியாவிற்கு வழங்கியுள்ளார். அதன்படி, வீட்டில் படுக்கையில் படுத்திருந்த பிரசாந்தின் கையில் இருந்த கன்யூலா குழாய் வழியாக, டாய்லெட் கிளீனர் மற்றும் அதிக அளவிலான மயக்க மருந்தைச் சந்தியா ஊசி மூலம் ஏற்றியுள்ளார். இதில் வலியால் துடி துடித்த பிரசாந்தை, படுக்கையிலிருந்து தள்ளி கீழே தரையிலும் தூக்கி வீசியுள்ளார். இதனால் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.

நேற்று இந்த மர்மக் கொலை வழக்கை உடைத்த போலீசார், கொடூர மனைவி சந்தியா, அவரது கள்ளக்காதலன் அனில் மற்றும் கூட்டாளி வெங்கட் சாய் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். கைதான மூவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.