தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திராவிட கட்சிகளின் 59 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகவெற்றி கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.

கடந்த மே 10-ஆம் தேதி ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவளித்து பரபரப்பைக் கிளப்பினர். இதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர்.

இவர்களுடன் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோரும் த.வெ.க-விலும், முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தி.மு.க-விலும் ஐக்கியமாகினர்.

இத்தகைய தொடர் கட்சித் தாவல்களாலும், கட்சிக்குள்ளேயே எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாலும் அதிர்ச்சியடைந்துள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமக்கு எதிராகக் குடைச்சல் கொடுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைக்க புதிய அதிரடி வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது.

அதாவது அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தபோது இவர்கள் செய்த முறைகேடுகள் மற்றும் பினாமி சொத்துக்கள் குறித்த மிக ரகசியமான ஊழல் ஆவணங்களை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ரகசிய ஆவணங்களை டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமைக்கு அனுப்பி வைத்து, மத்திய முகமைகள் மூலம் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க இ.பி.எஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அ.தி.மு.க உள்கட்சி அரசியலில் தற்போது விறுவிறுப்பும் பரபரப்பும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.