“யோவ்.. மொபைல் டார்ச் வெளிச்சத்துல பஸ்ஸா?” என்று நெட்டிசன்கள் அத்தனை பேரையும் வாயடைத்துப் போக வைத்துள்ள ஒரு பகீர் சம்பவம் தான் இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கர்நாடக அரசுப் பேருந்து ஒன்று, நள்ளிரவில் 8 பயணிகளுடன் கலபுரகியிலிருந்து சின்சோலியை நோக்கிப் பயணித்த போது, திடீரென பேருந்தின் முகப்பு விளக்குகள் (Headlights) வேலை செய்யாமல் பழுதடைந்து நின்றுள்ளன. இதனால் நட்டநடு ரோட்டில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில், நடத்துனர் தனது மொபைல் போன் டார்ச் லைட்டை அடித்து வெளிச்சம் காட்ட, ஓட்டுநர் அந்த அற்ப வெளிச்சத்தின் உதவியோடு மட்டுமே சுமார் 90 கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
8 பயணிகளின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் மட்டுமே இவ்வளவு தூரம் அரசு பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, “பயணிகளின் உயிருக்கு என்ன விலை? இப்படியா பொறுப்பில்லாமல் அரசு பேருந்துகளைப் பராமரிப்பது?” என்று நெட்டிசன்கள் போக்குவரத்துத் துறையைக் கமெண்ட் பாக்ஸில் வறுத்தெடுத்து, இந்த வீடியோவை அதிர்ச்சியோடு ஷேர் செய்து வருகின்றனர்.
