மேற்கு வங்க அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்கள், ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸை அடியோடு உலுக்கி எடுத்து வருகிறது. ஏற்கனவே ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி குழுவினர் கட்சியின் முக்கிய இடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தட்டிப்பறித்த நிலையில், தற்போது மாநிலத் தலைவர் சந்திரா முகர்ஜியின் திடீர் ராஜினாமா மம்தா பானர்ஜிக்கு பேரிடியாக இறங்கியுள்ளது.

கடந்த ஜூன் 3-ஆம் தேதிதான் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட மம்தாவின் தீவிர விசுவாசியான சந்திரா முகர்ஜி, பதவிக்கு வந்த ஒரே மாதத்திற்குள் நேற்று ராஜினாமா செய்த கையோடு தன் குமுறலை வெடிக்க வைத்துள்ளார்; கட்சி அலுவலகத்தில் வைத்து மம்தா தன்னை நடத்திய விதம் மனதை ரணமாக்கியதாகவும், அதிருப்தியாளர்களிடம் நான்தான் கட்சி அலுவலகத்தை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாக மம்தா பழி சுமத்தியது தன்னை ஆழமாகக் காயப்படுத்தியதாகவும் அவர் கண்ணீருடன் கொதித்துள்ளார்.

நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட மம்தா பானர்ஜி, உடனடியாக சமூக வலைதள லைவில் தோன்றி, “கட்சியை விட்டு ஓடிய அந்த அதிருப்தி தலைவர்கள் அனைவரும் நன்றிகெட்ட துரோகிகள், தைரியமிருந்தால் அவர்கள் நேரடியாகப் பாஜகவில் இணைந்து என்னை நேருக்கு நேர் எதிர்கொள்ளட்டும்; இந்த இக்கட்டான சூழலிலும் என்னுடன் நிற்கும் அடிமட்டத் தொண்டர்கள் தான் என் தங்கச்சுரங்கம்” என்று அனல் பறக்கும் சவால் விடுத்துள்ளார்.

மேலும், மூத்த தலைவர் சுப்ரதா பக்ஷி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்காலிகமாக கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பை மம்தா நேரடியாகத் தன் கையில் எடுத்ததோடு, குணால் கோஷ் மற்றும் மதன் மித்ரா ஆகியோரை கட்சியின் பொதுச் செயலாளர்களாக அதிரடியாக நியமித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, திரிணாமுல் காங்கிரஸின் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்கள் பிரிவில் தஞ்சமடைந்து சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியாக சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், மம்தாவுக்கு இன்னும் ஒரு பெரிய ஆப்பாக, இந்த அதிருப்தியாளர்கள் குழு தற்போது திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ சின்னத்தைப் பெற உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது மேற்கு வங்க அரசியலில் உச்சக்கட்ட த்ரில்லரை ஏற்படுத்தியுள்ளது.