சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசுகையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேடையில் அனல் பறக்கப் பேசிய அவர், “இன்றைக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்; இன்றைய சூழ்நிலையில், சிலர் சோபா வந்தவுடன் நம்முடைய கட்சியை விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே கூடியிருக்கும் நீங்கள் அனைவரும், என்றும் நம் கழகத்தோடுதான் இருப்போம் என்ற அசைக்க முடியாத உறுதியோடு திரண்டு வந்துள்ளீர்கள்” என்று கூறி, சமீபத்தில் கட்சியை விட்டுச் சென்றவர்களைக் காரசாரமாகச் சாடினார்.
தொடர்ந்து திமுகவிற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான ஆழமான உறவு குறித்துப் பேசிய அவர், இந்த பந்தத்தை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். “யார் என்ன சொன்னாலும், எந்தவொரு அவதூறுகளைப் பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றும் ஒரு பலமான காவல் அரணாக இருக்கும்; நமது தலைவர் மு.க.ஸ்டாலினும், திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக எப்போதும் உங்களுடன் துணையாக நிற்கும்” என்று உறுதியளித்தார்.
