அண்ணன் – தங்கை என்ற பரிசுத்தமான உறவை கொச்சைப்படுத்தும் விதமாக, உத்தர்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் நெஞ்சை பதறவைக்கும் மிக மோசமான குற்றச்சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 30 வயதான இளம்பெண் ஒருவரை, அவரது 32 வயது அண்ணனை துப்பாக்கி முனையில் மிரட்டி சிறைபிடித்து, இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது பற்றி பாதிக்கப்பட்ட அண்ணனும் தங்கையும் உடனடியாக காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று, குற்றவாளிகளுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது அண்ணனும் கிராமத்தில் வசிக்கும் அந்த நபர்களிடம் எருமை மாடு வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் பால் பண்ணை நடத்தி வரும் அந்த இரண்டு நபர்களிடம் வியாபாரத்தை பேசி முடிப்பதற்காக அண்ணன்-தங்கை இருவரும் அங்கு சென்றபோது, எதிர்பாராத விதமாக அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர். குற்றவாளிகள் முதலில் அண்ணனை துப்பாக்கி முனையில் மிரட்டி பணயக்கைதியாக பிடித்து வைத்ததோடு, அவரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த கொடூரத்திற்கு உடன்பிறப்புகள் இருவரும் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றபோது, அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதோடு, இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இந்த பயங்கரமான சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட வர்கள் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தை அடைந்து நடந்த விபரங்களைக் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
