டெல்லியின் லோதி காலனி பகுதியில் உள்ள ஒரு  குடியிருப்பு வளாகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து, 28 வயதே ஆன ஆக்ரிதி என்ற புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆக்ரிதி ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் ஒரு நபருக்கும் கடந்த ஏப்ரல் 24 அன்றுதான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை அன்று அவர் பிளாக்கின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் அந்த பெண்  மீட்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், திருமணமான இரண்டரை மாதங்களிலேயே இந்த விபரீதம் நடந்துள்ளதால்,  விசாரணைக்கு போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த மரணம் தற்கொலை அல்ல என்றும், வரதட்சணைக் கொடுமையால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுச் செய்த கொலை என்றும் ஆக்ரிதியின் குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளனர். ஆக்ரிதியின் தம்பி போலீசாரிடம் பேசுகையில், தனது அக்கா மனரீதியாக மிகவும் வலிமையானவர் என்றும், குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காகவே இதனைத் தற்கொலை போலச் சித்திரிக்கப் பார்க்கிறார்கள் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்;

மேலும், திருமணம் முடிந்த சில நாட்களிலிருந்தே அவரது கணவர் குடும்பத்தினர் ஆக்ரிதியை வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடூரமாகத் தாக்கித் துன்புறுத்தி வந்ததாகக் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த மரணம் குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வரும் டெல்லி போலீஸார், அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.