திண்டுக்கல் மாவட்டத்தில் அடிப்படைச் சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலத்தை நடுரோட்டிலேயே வைத்து இறுதிச் சடங்கு நடத்திய அவலச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கும்பூர் வயல் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக அவரது சொந்த வீட்டுக்குக் கொண்டு செல்ல உறவினர்கள் முயன்றுள்ளனர்.
ஆனால், அந்த கிராமத்திற்குச் செல்ல முறையான சாலை வசதி அடியோடு இல்லாததால், வேறு வழியின்றி பழனி பிரதான சாலையின் ஓரத்திலேயே முதியவரின் சடலத்தை வைத்து உறவினர்களும் பொதுமக்களும் தங்களது கண்ணீர் அஞ்சலியையும் இறுதிச் சடங்குகளையும் நடத்தியுள்ளனர்.
இந்த காலக்கட்டத்திலும், ஒரு மனிதனின் இறுதிப் பயணத்திற்குக்கூடச் சொந்த ஊருக்குள் செல்ல வழி இல்லாத அவல நிலை நீடிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
