உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் வசிக்கும் நிதிஷா என்பவரது வீட்டில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 2 வைர மோதிரங்கள் மற்றும் ஒரு தங்க செயின் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான நகைகள் திடீரெனக் காணாமல் போயின. அப்போது வீட்டில் வேலை செய்து வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விமலா தேவி என்ற இளம்பெண் மீது நிதிஷாவுக்கு லேசான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அதைக் கேட்டதற்கு, “நகையை பத்தி எனக்கு எதுவும் தெரியாது, வேணும்னா நானே போலீசுக்கு போன் போடுறேன்” என்று கூறி விமலா தேவி பக்கா அப்பாவி போல நாடகமாடியுள்ளார். அவரது பேச்சை அப்படியே நம்பிய நிதிஷா, போலீசில் புகார் அளிக்கும்போது தனக்கு யார் மீதும் சந்தேகமில்லை என்று கூறி வேலைக்காரப் பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓராண்டு ஆகியும் நகையைப் பற்றி எந்த துப்பும் கிடைக்காத நிலையில், கடந்த ஜூன் 29 அன்று நிதிஷா தனது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தற்செயலாகத் தனது முன்னாள் பணிப்பெண் விமலா தேவியின் இன்ஸ்டா பக்கத்தைப் பார்த்த நிதிஷாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.
விமலா தேவி வெளியிட்டிருந்த ரீல்ஸ் வீடியோ மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் புகைப்படங்களில், ஓராண்டுக்கு முன்பு தனது வீட்டில் காணாமல் போன அதே தங்க செயினை அவர் பகட்டாக அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த ஆதாரத்தை வைத்து நிதிஷா கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி ராஜ்பூர் போலீசார் விமலா தேவியைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், விமலா தேவி தக்க சமயம் பார்த்து நகைகளைத் திருடிவிட்டு ஓராண்டாக ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்ட போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
