கர்நாடக மாநிலம் பெங்களூரு புரூக்பீல்டில் உள்ள பிரபல ‘கேப்கெமினி’ (Capgemini) ஐடி நிறுவன வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ‘லிட்டில் ஸ்காலர்ஸ்’ என்ற குழந்தைகள் காப்பகத்தில் (Day-care) பிஞ்சு குழந்தைகள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், ஒரு சிறுமி பாத்ரூமிற்குள் பூட்டப்பட்டு, கதவின் கீழ் இருக்கும் சிறிய இடைவெளி வழியாக “அம்மா, அம்மா” என்று அழுதுகொண்டே எட்டிப் பார்க்கும் காட்சி பார்ப்போரை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோவின் அடிப்படையில், 55 வயதான காப்பகப் பராமரிப்பாளர் விஜயலட்சுமியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் 4 பெண் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

​இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட தம்பதியினர் போலீசாரிடம் கூறுகையில், “எங்கள் ஒரே மகளை 8 மாதங்களுக்கு முன்புதான் இங்கு சேர்த்தோம். சேர்த்த சில மாதங்களிலேயே அவளுக்குப் பாத்ரூம் என்றாலே பயமும் வெறுப்பும் ஏற்பட்டது. குளிக்கக் கூப்பிட்டாலே அலறிக்கொண்டு ஓடி வந்தாள்.

இப்போ இந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் புரிகிறது, அவள் அழுததற்காக அந்தப் பாவிங்க அவளைப் பாத்ரூமிற்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர்” என்று கண்ணீருடன் குமுறுகின்றனர். மற்றொரு 3 வயது ஆண் குழந்தையின் பெற்றோரும், காப்பக ஊழியர்கள் குழந்தைகளைக் கடுமையான குரலில் மிரட்டி பயந்து நடுங்க வைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே, குழந்தைகளை வாஷிங் மெஷினில் பூட்டியதாக எழுந்த புகார்களுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறியுள்ள போலீசார், வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தால் கேப்கெமினி நிறுவனம் அந்த மையத்தை அதிரடியாகத் தற்காலிகமாக மூடி உத்தரவிட்டுள்ளது.