பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் பகுதியில், கணவனைத் தன்வசப்படுத்த இரண்டு மனைவிகள் மந்திரவாதியை நாடிய விவகாரம் கொடூர கொலையில் முடிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த தபேஸ்வர் சாஹ்னி என்பவர், முதல் மனைவி சாரதா தேவி இருக்கும்போதே நேபாளம் சென்று லட்சுமி தேவி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவி சாரதா தேவி, கணவனையும் அவரது இரண்டாவது மனைவியையும் பிரிக்கக் கோரி சிக்கந்தர் சாஹ்னி என்ற மாந்திரீகரை அணுகியுள்ளார்.

இதற்காக ரூ.50,000 தருவதாக ஒப்பந்தமும் பேசப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் குறித்து அறிந்த கணவனும் இரண்டாவது மனைவியும், அதே மந்திரவாதியை ரகசியமாகத் தொடர்புகொண்டுள்ளனர். முதல் மனைவி கொடுத்த தொகையை விட வெறும் ஆயிரம் ரூபாய் கூடுதலாக, அதாவது ரூ.51,000 தருவதாக ஆசைவார்த்தை கூறி, சாரதா தேவியையே ஒழித்துக்கட்ட அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

பணத்திற்கு ஆசைப்பட்டு மனம்மாறிய அந்த  மந்திரவாதி, சாரதா தேவியை வெளியில் அழைத்துச் சென்று கணவன் மற்றும் இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். விபத்து போலக் காட்டி தப்பிக்க நினைத்த இவர்களின் நாடகத்தை, தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்திய போலீஸார் ஆதாரங்களுடன் உடைத்தனர். தற்போது மந்திரவாதி சிக்கந்தர் சாஹ்னி மற்றும் இரண்டாவது மனைவி லட்சுமி தேவி ஆகியோரைக் கைது செய்துள்ள காவல் துறையினர், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான கணவன் தபேஸ்வர் சாஹ்னியை வலைவீசித் தேடி வருகின்றனர்.