தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் செல்லக்கூடிய மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேரிகார்டுகள் (Barricades) பலத்த காற்றினால் மொத்தமாகச் சரிந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பேரிகார்டுகளின் அடிப்பகுதியில் முறையான பாதுகாப்போ அல்லது பலமான பிடிப்போ இல்லாமல், வெறும் சிமெண்ட் கலவையால் செய்யப்பட்ட சிறிய மோல்டு கற்கள் மூலமே அவை நட்டு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் இந்த பேரிகார்டுகள் அனைத்தும் திடீரெனச் சாலையில் சாய்ந்து விழுந்துள்ளன.
இந்த எதிர்பாராத விபத்தில், அந்த வழியே சென்ற சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, குறிப்பாக அங்கிருந்த ஒரு பெண்மணியின் மீது பேரிகார்டு பலமாக விழுந்ததில் அவரது தலையில் லேசான காயமும், காலில் பலத்த அடிபட்டு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மக்கள், அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கிற்கு எதிராகத் தங்களது கடுமையான கண்டனங்களையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “ஒரு மேம்பாலத்தில் முறையான சாலை வசதிகளையோ, போக்குவரத்து விதிகளையோ சரியாக நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டு, இப்படி ஆபத்தான முறையில் பேரிகார்டுகளை வைப்பது அவசியமா? பலத்த காற்று அடித்தால் இவை சரிந்து விழும் என்ற சாதாரணக் கணக்கு கூட அதிகாரிகளுக்குத் தெரியாதா?” என்று பொதுமக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
“>
அத்தோடு, அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் படுகாயமடைந்து, எலும்பு முறிவோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் ஏழைப் பெண்மணிக்கு அரசுத் தரப்பில் இருந்து என்ன மாதிரியான இழப்பீடும், மருத்துவ உதவிகளும் செய்யப்படப் போகிறது என்ற கேள்விகளையும் சமூக வலைத்தளங்களில் தூத்துக்குடி மக்கள் எழுப்பி வருகின்றனர்.
