பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு வந்த நெதர்லாந்து மற்றும் வெனிசுலா நாடுகளைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 29-ஆம் தேதி லாகூர் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய அப்பெண்களை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

மேலும், அவர்களை விடுவிக்கக் கோரி கடத்தல்காரர்கள் மிரட்டிப் பணம் கேட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் தந்தை, ஸ்பெயின் நாட்டிலிருந்து நேரடியாகப் பாகிஸ்தான் காவல்துறையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அளித்த ரகசியத் தகவலின் பேரில், போலீஸார் அதிரடியாகச் செயல்பட்டு அப்பெண்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான முகமது ரசா டார் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் முக்கியத் திருப்பமாக, கைது செய்யப்பட்டுள்ள ரசா டார், பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டாரின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் ரசா டாருக்கும் இடையே கடந்த 2025 அக்டோபரில் சிங்கப்பூரில் தொழில் நிமித்தமாக நட்பு ஏற்பட்டுள்ளது என்றும், அவரது அழைப்பின் பேரிலேயே அவர்கள் பாகிஸ்தான் வந்துள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களின் உறவினர்களே இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டிருப்பது, பாகிஸ்தானில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.