மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில், கணவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையாகக் குறைத்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் சிட்டிங் டிவிஷன் பெஞ்ச்  தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவா என்பவருக்கும், அவரது மனைவி கிரணுக்குமிடையே ஒரு  ஆற்றங்கரையோரம் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கிரண், “உன்னைப் போன்று ஆயிரம் கணவர்களை என்னால் வைத்துக் கொள்ள முடியும்” என்று ஏளனமாகப் பேசியுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த ஷிவா, அருகில் கிடந்த கல்லை எடுத்து கிரணைக் கொடூரமாகத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சிந்த்வாரா விசாரணை நீதிமன்றம் ஷிவாவிற்கு ஆயுள் தண்டனை விதித்திருந்த நிலையில், அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விவேக் அகர்வால் மற்றும் அவனிந்த்ர குமார் சிங் அடங்கிய அமர்வு, சிந்த்வாரா நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி அமைத்தது. தங்களுக்குள் நடந்த வாக்குவாதத்தின் போது மனைவி கூறிய வார்த்தைகள் ஒரு கணவனின் சுயக்கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் வகையிலான “கடுமையான மற்றும் திடீர் ஆத்திரமூட்டல்” என்ற சட்டப் பிரிவின் கீழ் வருவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், ஷிவா முன்கூட்டியே திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், அப்படித் திட்டமிட்டிருந்தால் அவரே காவல் நிலையத்திற்கும், பெண்ணின் உறவினர்களுக்கும் போன் செய்து தகவலைக் கூறியிருக்க மாட்டார் என்றும் நீதிமன்றம் கருதியது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கல் சம்பவ இடத்திலேயே கிடந்த ஒன்று என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி சில காயங்கள் ஆற்றுப்படுகையின் பாறைகளில் மோதியதால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை திட்டமிட்ட கொலைஎன்ற பிரிவில் இருந்து மாற்றி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 பகுதி II-ன் (குற்றவியல் கொலை) கீழ் கொண்டுவந்து, ஷிவாவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.