பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கடந்த ஜூன் 30ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அந்தப் பகுதி முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சடலம் மிக மோசமாக கருகியிருந்ததால், ஆரம்பத்தில் அவர் யார் என்று அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு கடும் சவால் ஏற்பட்டது. ஆனால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த சடலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபருடையது என்பது தெரியவந்தது.
சிறு வயதிலேயே தாய் இறந்துவிட்டதால், அந்த வாலிபர் தன் தாய்மாமன் வீட்டில்தான் வளர்ந்துள்ளார். அங்கு வளர்ந்த அவருக்கும், அவருடைய மாமன் மகளுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் குடும்பத்தில் நீண்ட நாட்களாகப் பெரிய சண்டை நடந்து வந்துள்ளதுடன், காதலை கைவிடுமாறு அந்த வாலிபருக்குத் தொடர்ந்து அழுத்தமும் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்தக் காதல் விவகாரம் மாமாவுக்கு 3 வருடங்களுக்கு முன்பே தெரியவந்திருக்கிறது. அவர் பலமுறை எச்சரித்தும், அந்த வாலிபர் அதை கேட்காமல் சென்னையிலிருந்தபடியே பெண்ணுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமா, ஒரு திட்டம் போட்டு அந்த வாலிபரை சென்னையிலிருந்து சமஸ்திபூருக்கும், அங்கிருந்து பாட்னா சிட்டிக்கும் வரவழைத்துள்ளார். அங்கு 2 நாட்கள் வைத்துப் பேசியும் வாலிபர் கேட்காததால், ஜூன் 28ஆம் தேதி மாமாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, அந்த வாலிபரை கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க, சடலத்தை துண்டு துண்டாக வெட்டி தீயிட்டு எரித்துள்ளனர். தற்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தாய்மாமனை போலீஸார் கைது செய்துள்ளனர். தன் மகள் மற்றும் மருமகனின் காதலால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
