ஃபோர்டு நிறுவனத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 60 வயது ஊழியர் கியூர்த் க்ரோம் என்பவர், வெறும் 1.95 டாலர் மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட்டைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அவர், தனக்கு ஆண்டுக்கு 2 லட்சம் டாலர் சம்பளம் கிடைப்பதாகவும், இவ்வளவு பெரிய வருமானம் உள்ள தான், சிறு தொகைக்காகத் திருட வேண்டிய அவசியம் இல்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

தான் பிஸ்கட் பாக்கெட்டிற்காகச் சரியாகப் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பித்த போதிலும், நிறுவனம் முதலில் அவரைத் திருடன் என்றும், பின்னர் அவர் பொய் சொல்வதாகவும் முத்திரை குத்தியது அவருக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

தனது வங்கி கணக்கு அறிக்கையைச் சரிபார்த்தபோது, அந்த பிஸ்கட் பாக்கெட்டிற்கான பணம் ஏற்கனவே கழிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகு, தொழிற்சாலையின் உணவக நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தின் ஆய்வுக்குப் பிறகு, அவர் பிஸ்கட் பாக்கெட்டிற்குப் பணம் செலுத்தியது உண்மையானது என்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் வேலையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நிறுவனம் தன்னைத் தவறாகச் சித்தரித்ததாலும், அவமானப்படுத்தியதாலும் அந்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்டு, தனது வீட்டிற்கு அருகிலேயே வேறு ஒரு நல்ல வேலையில் சேர்ந்துவிட்டார்.