அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் தொலைத்தொடர்பு கோபுர உச்சியில், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான முறையில் ஏறி, தங்களது திருமண முன்மொழிவை மேற்கொண்ட இளம் ஜோடியை நியூயார்க் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட பிரபல சாகச வீரர்களான ஏஞ்சலா நிகோலாவ் மற்றும் வான்யா பீர்கஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்த இந்த ஜோடி, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் சுமார் 1,454 அடி உயரமுள்ள ஒளிபரப்புக் கோபுரத்தின் உச்சிவரை கயிறுகள் அல்லது வேறு எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஏறி சாகசம் புரிந்துள்ளனர். இந்த ஆபத்தான சாகசத்தை அவர்கள் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பியதுடன், “அதிகாரத்தின் மீதான காதலை விட காதலின் அதிகாரம் மேலோங்கும்போது உலகம் அமைதியை அறியும்” என்ற வாசகம் அடங்கிய கொடி ஒன்றையும் அங்கே பறக்கவிட்டுள்ளனர்.
🚨 BREAKING: 2 people have climbed the Empire State Building in New York to fly a flag. The flag reads “When the power of love beats the love of power the world knows peace.” pic.twitter.com/YrIudqf9Lx
— FOX 4 NEWS (@FOX4) July 1, 2026
ஏற்கனவே உயரமான கட்டிடங்களில் பாதுகாப்பு இன்றி ஏறும் சாகசங்களுக்காக அறியப்பட்ட இந்த ஜோடி, இதற்கு முன்னர் மலேசியாவின் 2,227 அடி உயரமுள்ள மெர்டேகா 118 கோபுரத்தில் ஏறியது தொடர்பான ஆவணப்படத்திலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த காதல் ஜோடி, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் கோபுரத்தின் உச்சிவரை அத்துமீறிச் சென்றதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்குள்ள ஒளிபரப்பு அலைவாங்கிகள் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டன. மேலும், மின்சார விநியோகத்துடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த கோபுரத்தின் மீது அவர்கள் ஏறியதால், மின்காந்த அலைகளின் தீவிர தாக்கத்திற்கு உள்ளாகி உயிருக்கே ஆபத்து ஏற்படும் விபரீத சூழலும் அங்கு ஏற்பட்டிருந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அந்த ஜோடியை போலீஸார் கைது செய்த நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மேலும் ஜாமினில் வெளியே வந்ததும் அவர்கள் இருவரும் முத்தமழை பொழிந்தனர்.
