ஐரோப்பிய நாடுகளில் தற்போது கோடைக்காலம் தொடங்கி வெப்ப அலைகள் தீவிரமடைந்து வருவதால், அங்குள்ள பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடைகளில் ஏசி மற்றும் கூலர்களை வாங்குவதற்காக மக்கள் முண்டியடிக்கும் வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில், அண்மையில் வெளியான ஒரு பெண் டென்னிஸ் வீராங்கனையின் வீடியோ இணையவாசிகளை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஐரோப்பாவின் 36 டிகிரி செல்சியஸ் கடுமையான வெயிலில், வீராங்கனை டென்னிஸ் விளையாட தன் கையில் ரேக்கெட்டைப் பிடித்தபோது, அதன் கைப்பிடியில் இருந்த பிளாஸ்டிக் வெப்பத்தின் தாக்கம் காரணமாக உருகத் தொடங்கியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by News Toli | न्यूज़ टोली (@newstoliofficial)

இதனால் அந்தப் பெண்ணின் கைகள் முழுவதும் கறுப்பு நிறமாக மாறிய விநோதக் காட்சி நெட்டிசன்களை அதிரவைத்துள்ளது. அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் வெப்பத்தின் காரணமாகவே பிளாஸ்டிக் உருகியிருக்கலாம் என நிபுணர்கள் கூறினாலும், இப்படியொரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்பதால் இந்த வீடியோ விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதற்கிடையே, @newstoliofficial என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஐரோப்பியர்களை  கலாய்த்து கமெண்டுகளை தட்டிவிட்டு வருகின்றனர். சிலர் அந்த டென்னிஸ் ரேக்கெட்டின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளனர். மேலும், “36 டிகிரி வெயிலுக்கே இப்படி உருகிப் போகிறீர்களே, இந்தியாவில் கோடைகாலத்தில் 45 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும், அப்போதெல்லாம் நாங்கள் சாதாரணமாக நடமாடுகிறோம்” என்று இந்திய நெட்டிசன்கள் பதிவிட்டு  வருகின்றனர்.

மற்றொரு பயனர், “எங்கள் ஊரில் ஐஸ்கிரீம் வாங்குவதற்குள் உருகிவிடுகிறது, நீங்கள் என்னவென்றால் 36 டிகிரிக்கே அலறுகிறீர்கள்” என்றும், “இந்தியாவில் மக்கள் 44 டிகிரி வெயிலில் வியர்வை சிந்தி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் நீங்கள் டென்னிஸ் விளையாடிக் கொண்டு வீடியோ போடுகிறீர்கள்” என்றும் காரசாரமாகவும் சுவாரசியமாகவும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.