“புதிய பொறுப்புகளிலிருந்து விலகல், கட்சி உறுப்பினராகத் தொடர்வோம்” என்று அதிமுகவின் முக்கிய மூத்த நிர்வாகிகள் அதிரடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக எஸ்.பி.வேலுமணி, கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மற்றொரு துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர்களான கே.பி.அன்பழகன் மற்றும் கே.சி.வீரமணி ஆகியோரும் தங்களது கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளனர். கட்சியின் மிக முக்கியத் தூண்களாகக் கருதப்படும் இந்த நான்கு சீனியர் புள்ளிகளும் ஒரே நேரத்தில் தங்களது பொறுப்புகளைத் துறந்திருப்பது அதிமுகவிற்குப் ‘பெரிய இழப்பு’ என்று மூத்த நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைக்குக் கட்சி உறுப்பினராக மட்டுமே தொடரப் போவதாக இவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அடுத்தகட்டமாக இவர்கள் தங்களது எம்.எல்.ஏ (MLA) பதவிகளையும் ராஜினாமா செய்யப்போகிறார்களா என்ற பரபரப்பான கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவது போல் முக்கிய நிர்வாகிகள் பொறுப்புகளில் இருந்து விலகுவது அதிமுகவிற்குள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
