தனது சொந்த திருமணத்திற்காகக் கோரப்பட்ட விடுமுறையை நிறுவனம் நிராகரித்ததால், கடுப்பான ஊழியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அனுப்பிய அந்த நெத்தியடி ராஜினாமா மின்னஞ்சல் தற்போது லிங்க்டின் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஆரம்பத்தில் மிகவும் கண்ணியமாகவும், நிறுவனத்தின் முடிவை ஏற்றுக்கொள்வது போலவும் தொடங்கும் அந்த மின்னஞ்சலின் கடைசி வரி, ஒட்டுமொத்த கதையையும் மாற்றி நிறுவனத்திற்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.
அந்த மின்னஞ்சலின் இறுதியில் அவர், “எனது திருமண விடுமுறைக்கான கோரிக்கையை நிராகரித்த உங்களின் முடிவை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். அதே சமயம், எனது திருமணத்தை என்னால் தள்ளிப்போட முடியாது என்பதால், இந்த மின்னஞ்சலையே எனது ராஜினாமா கடிதமாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வேலைக்காகத் தனது சொந்த வாழ்க்கையையும், மிக முக்கியமான திருமணத்தையும் தியாகம் செய்ய முடியாது என்பதை மிக நாசூக்காகவும் அதே சமயம் அழுத்தமாகவும் வெளிப்படுத்திய அந்த ஊழியரின் முடிவு, தற்போதைய கார்ப்பரேட் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் மனநலம் குறித்த பெரும் விவாதத்தை இணையத்தில் உருவாக்கியுள்ளது.
