செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களால் வேலைவாய்ப்புகள் பறிபோவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் சூழலில், பிரபல அமெரிக்க வாகன உற்பத்தியாளரான ஃபோர்டு நிறுவனம், தயாரிப்புத் தரத்தை மேம்படுத்துவதற்காகத் தனது முன்னாள் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 350 அனுபவம் வாய்ந்த ‘மூத்த பொறியாளர்களை’ ஃபோர்டு நிறுவனம் மீண்டும் வேலைக்கு எடுத்துள்ளது; பல தசாப்தங்களாகப் பெற்ற மனிதப் பொறியியல் அனுபவத்தின் மதிப்பைப் புறக்கணித்து, தானியக்க முறையை அதிகமாகச் சார்ந்திருந்ததே நிறுவனத்தின் ஏமாற்றமளிக்கும் தரக் குறைபாடுகளுக்குக் காரணம் என்று ஃபோர்டு தலைமை நிர்வாக அதிகாரி குமார் கல்ஹோத்ரா ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ள இந்த அனுபவமிக்க வல்லுநர்கள், இளம் ஊழியர்களுக்கு வழிகாட்டுவதோடு, எதிர்பார்த்தபடி செயல்படத் தவறிய ஏஐ கருவிகளுக்கு மறுபயிற்சி அளிக்கவும், தயாரிப்பு இறுதிக் கட்டத்தை அடைவதற்கு முன்பே தரப் பிரச்சினைகளைக் கண்டறியவும் உதவ உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.