சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களின் பிராண்டட் உடைகள் மற்றும் பயன்படுத்தப்படாத புத்தம் புதிய ஆடைகள் டன்கணக்கில் பாலைவனத்தில் கொட்டப்பட்டு, ஆடை கழிவுகளின் சுடுகாடாக மாறியுள்ளது சிலே  நாட்டின் அட்டகாமா பாலைவனம். உலகளாவிய ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’  கலாச்சாரத்தின் காரணமாக, ஆண்டுதோறும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து விற்கப்படாத மில்லியன் கணக்கிலான ஆடைகள் சிலே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Peace Through Trade (@peacethroughtrade)

இவ்வாறு வந்து சேரும் ஆடைகளில் பெரும்பாலானவை விற்கப்படாமலோ அல்லது மிகச் சிறிய குறைபாடுகள்  காரணமாகவோ நிராகரிக்கப்பட்டு, இந்த பாலைவனப் பகுதியில் மலைபோல் குவிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் மட்குவதற்குப் பல நூறு ஆண்டுகள் ஆகும் என்பதால், இங்கு தேங்கும் கழிவுகள் உலக அளவில் பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பொதுவாக, ஆடைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாலியஸ்டர் மற்றும் நைலான் போன்ற செயற்கை இழைகள் இயற்கையாக அழியாத தன்மை கொண்டவை.

இதனால், இந்த ஆடை மலைகளுக்குத் தீ வைக்கப்படும்போது வெளியாகும் நச்சுப் புகையானது அப்பகுதியின் காற்றையும் நிலத்தையும் கடுமையாக மாசுபடுத்துகிறது. இந்த ஆடைகளை மறுசுழற்சி  செய்வதற்கான செலவு, புதிய ஆடைகளைத் தயாரிப்பதை விடக் கூடுதலாக இருப்பதாலேயே பெரு நிறுவனங்கள் இவற்றை அப்படியே கைவிடுகின்றன. உலகிற்கு நாகரிகத்தை விற்கும் பிராண்டட் நிறுவனங்களின் இந்த மறைமுகப் பக்கம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதோடு, நுகர்வோர் கலாச்சாரத்தின் பேராசைக்கு ஒரு சான்றாகவும் இந்த அட்டகாமா பாலைவனம் மாறியுள்ளது.