ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் பல்லப்கர் பகுதியில் ஜவுளி வியாபாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராகுல் என அடையாளம் காணப்பட்ட அந்த வியாபாரி, இந்த தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது மரணத்திற்கு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதோடு, தன்னை அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் அவர் அந்த வீடியோவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

அவர் ஜோதி (மனைவி), வீணா (மாமியார்), பிட்டு (மாமனார்) மற்றும் நீது (மனைவியின் சகோதரி) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசிய ராகுல், வீட்டில் தம்மைக் கொண்டு வீட்டைப் பெருக்குவது, பாத்திரங்களைக் கழுவ வைப்பது போன்ற வேலைகளைச் செய்ய வைத்த பிறகும் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார். மேலும், தன் மீது உடல்ரீதியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் சட்டம் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தனது மரணத்திற்குப் பிறகு தனது சொத்துக்கள் அனைத்தும் தனது தாய், சகோதரி மற்றும் சகோதரர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்றும் கோரியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.