பீஜிங்கில் உள்ள 108 மாடி ‘சிடிக் டவர்’ கட்டடத்தின் மீது, சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘சன்வேர்ட் எஸ்.ஏ 60எல் ஆரோரா’ என்ற சிறிய ரக விளையாட்டு விமானம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. நாட்டின் மிக உயர்தர பாதுகாப்பு வளையமும், அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழும் பகுதியுமான ‘ஜோங்நானஹாய்’க்கு மிக அருகில் இந்த விபத்து நடந்ததால், சீனாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலத்த கேள்விக்குறியாகியுள்ளன. இந்த விபத்தில்  விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு, கட்டடத்தில் இருந்த 13 பேர் படுகாயமடைந்தனர்; மோதிய வேகத்தில் பிரம்மாண்ட கண்ணாடிகள் உடைந்து சிதறி, சாலைகளில் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடந்த அந்த நொடிகள் பீஜிங் நகரையே அதிர வைத்தன.

ஆனால், இந்த கோர விபத்தை விடவும் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சீன அரசு அரங்கேற்றிய மின்னல் வேக டிஜிட்டல் முடக்கம் தான்! சம்பவ இடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது மொபைலில் எடுத்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் ‘வெய்போ’, ‘வீசாட்’ போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அடுத்த கணமே, சீனாவின் அதிகாரப்பூர்வ இணையக் கட்டுப்பாட்டு அமைப்பான ‘சி.ஏ.சி’ (CAC) தனது ‘கிரேட் ஃபயர்வால்’ தொழில்நுட்பத்தின் மூலம் அத்தனையையும் மொத்தமாகத் துடைத்து அழித்தது. “பீஜிங் விமான விபத்து” போன்ற வார்த்தைகளையே தேட முடியாதபடி முடக்கி, விபத்து நடந்த தடயமே இல்லாமல் சீனா நாடகமாடினாலும், 2011 ரயில் விபத்து முதல் 2022 சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விபத்து வரை உண்மைகளையும் பிளாக் பாக்ஸ் அறிக்கைகளையும் மூடி மறைக்கும் சீனாவின் கறுப்பு வரலாறு, இந்த விபத்தின் பின்னணியிலும் ஏதோ ஒரு பெரிய உண்மையை சீனா மறைக்கத் துடிக்கிறது என்ற பலத்த சந்தேகத்தை சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.