தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அரசியல் களம் பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சமீபகாலமாக விஜய் மற்றும் அவரது தவெக அரசின் ஆட்சியைத் தொடர்ந்து பாராட்டிப் பேசி வருகிறார். அதே நேரத்தில், தற்போதைய திமுக கூட்டணியை மதிமுக கடுமையாக விமர்சித்து வருவதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் மதிமுகவின் முக்கியப் பொதுக்கூட்டத்தின் போது, திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலக அக்கட்சி முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
இதற்கிடையே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு மதிமுக எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் தற்போது விலகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் “நான் மதிமுகவில் இருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளதால், மதிமுக உயர்நிலைக்கழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும் மதிமுக கூட்டணியை விட்டு வெளியேறத் தயாராகும் வேளையில், உதயசூரியன் சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ தங்களை விட்டு விலகி முழுமையாக திமுகவிலேயே தஞ்சமடைந்துள்ளது மதிமுகவிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
