19 வயதே ஆகும் ஆயுஷ் சிங் என்ற இளைஞர், எந்தவிதமான பெரிய கல்லூரிப் பட்டமும் அல்லது வசதியான பின்னணியும் இல்லாமல், தனது விடாமுயற்சியால் செயற்கை நுண்ணறிவு துறையில் மாதம் 1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி அசத்தி வருகிறார்.
கோவிட் பெருந்தொற்றின் போது தனது 13-வது வயதில் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்த அவர், பழைய மடிக்கணினி மற்றும் இணைய வசதியைக் கொண்டு சுயமாக மெஷின் லேர்னிங் கற்றுக்கொண்டார்.
அவரது கடின உழைப்பால் 14 வயதிலேயே உலகின் புகழ்பெற்ற எம்ஐடி கல்வி நிறுவனத்தின் பாராட்டைப் பெற்ற அவர், இன்று ‘டாப்மேட்’ தளம் மூலம் பல இளைஞர்களுக்கு AI பாடங்களைக் கற்பித்து வருகிறார்.
ஆயுஷ் சிங்கின் இந்த ஊக்கமளிக்கும் கதையை டாப்மேட் நிறுவனத்தின் இணை நிறுவனர் தினேஷ் சிங் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திறமை இருந்தும் அதை எப்படித் தொழிலாக மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கும் பலருக்கு, ஆயுஷின் பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தச் செய்தியைப் பார்த்த பல இளைஞர்கள், தங்களின் வயதையும் ஆயுஷின் சாதனைகளையும் ஒப்பிட்டு ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மிக இளம் வயதில் இத்தகைய சாதனையை எட்டியுள்ள ஆயுஷ் சிங், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு புதிய முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
