தலைநகர் டெல்லியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த கேப் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மெட்ரோ நிலையம் அருகே தனது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த அந்த அப்பாவி சிறுமியை, அதிகாலை 4.15 மணியளவில் பாசு குமார் சிங் (28) என்ற கார் ஓட்டுநர் கடத்திச் சென்று, குர்கான்-பரிதாபாத் சாலையில் உள்ள ஆரவல்லி காட்டுப் பகுதியில் வன்கொடுமை செய்து கொலை செய்து பிணத்தை வீசியுள்ளார்.
அந்த நள்ளிரவில் ஆன்லைன் ஆப் மூலம் சவாரி எதுவும் கிடைக்காத விரக்தியில் இருந்த அந்த மிருகம், சிறுமியின் “அப்பா காப்பாத்துங்க!” என்ற அலறல் சத்தத்தைக் கேட்டு தந்தை தடியுடன் ஓடி வருவதற்குள் காரில் கடத்திச் சென்று இந்த விபரீதத்தை அரங்கேற்றியுள்ளது.
கொடூரக் கொலையைச் செய்துவிட்டு கறைபடிந்த காரைக் கழுவ குர்கானில் உள்ள தன் வீட்டுக்குச் சென்ற அந்த டிரைவர், வழியில் துணிகளை மாற்றிக்கொண்டு, உடனடியாகக் கிடைத்த அடுத்த ஒரு சவாரியை ஏற்றுக் கொண்டு டெல்லி விகாஸ்புரி நோக்கிச் சென்றபோது, சிசிடிவி (CCTV) மற்றும் கார் நம்பர் மூலம் துப்புத் துலக்கிய டெல்லி போலீசார் காலை 11 மணிக்கே அவனை மடக்கிப் பிடித்தனர்.
மேலும், கொலை நடந்த இடத்திற்கு அவனைக் கூட்டிச் சென்றபோது, போலீசாரின் துப்பாக்கியைப் பறித்துத் தப்பியோட முயன்று சுட்டதால், போலீசார் நடத்திய தற்காப்புத் துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி பாசு குமாரின் காலில் குண்டு பாய்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;
பீகாரைச் சேர்ந்த அந்த ஏழைக் குடும்பம் பிழைப்புக்காக டெல்லி வந்து 4 மாதங்களே ஆன நிலையில், தங்களின் மூத்த மகளைப் பறிகொடுத்துவிட்டு கண்ணீர்க் கடலில் மூழ்கியுள்ள இந்தச் சம்பவம் சோசியல் மீடியாவில் கடும் கண்டன அலைகளை உருவாக்கியுள்ளது.
