பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்னிகாலே அவுட்டில் உள்ள சாய் கிரீன் அபார்ட்மென்ட் குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர முக்கொலை அரங்கேறியுள்ளது. மென்பொருள் பொறியாளரான சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் இவர்களது இளைய மகள் சுப்ரியா (20) ஆகியோர் கத்தியால் கொடூரமான முறையில் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தம்பதியரின் மூத்த மகளான ஸ்வேதாவும் அவரது காதலன் கென்னத்தும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததும், இந்த காதல் உறவுக்கு ஸ்வேதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதும் தெரியவந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த ஸ்வேதாவும் அவரது காதலன் கென்னத்தும் சேர்ந்து சோமசுந்தர், முத்துலட்சுமி, சுப்ரியா ஆகியோரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பெற்றோரையும் உடன்பிறந்த தங்கையையும் காதலனுடன் சேர்ந்து இளம்பெண் தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
