தமிழகத்தில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகச் சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “உங்கள் ஆச்சரியக் குறிகளின் அராஜகத்திற்கு எப்பொழுது முடிவு கட்டப் போகிறீர்கள்?” என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) வலைதளப் பதிவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண் ஒருவரை, தவெக கொடி கட்டிய காரில் பின்தொடர்ந்து சென்ற அக்கட்சி நிர்வாகி, ஜாதி ரீதியாக இழிவாகப் பேசி அத்துமீறி தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி பெரும் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், ஜாதி ரீதியாக வசைபாடுவதிலும், பெண்களிடம் அத்துமீறுவதிலும் திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு அமைச்சர் பதவியும், சமூக விரோதிகளுக்குக் கட்சிப் பொறுப்பும் கொடுத்து அழகு பார்ப்பதுதான் தவெக-வின் மாற்று அரசியலா என்று கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், சொந்தக் கட்சிக்காரர்களையே கட்டுக்குள் வைக்க முடியாத உங்களால், தமிழகத்தில் உலவும் கொடும் குற்றவாளிகளை எப்படித் தடுக்க முடியும் என்று சாடியுள்ளார். மேலும், “அண்ணன், மாமன்” எனப் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் அடைமொழிகளைத் தனக்குத்தானே சூட்டிக் கொள்வதிலும், சினிமா பிரபலங்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் வெற்று விளம்பரங்களில் மூழ்கிக் கிடக்காமல், மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகள் மண்டிக் கிடக்கும் தவெக-வை முதல்வர் முதலில் தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
